அருணாச்சலப் பிரதேசத்தில் 35 ஆண்டுகால 80:20 அரசு வேலை ஒதுக்கீடு ரத்து
அருணாசலப் பிரதேசம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.) அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த 80:20 ஒதுக்கீட்டு முறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பணிகளுக்கா
pema khandu


அருணாசலப் பிரதேசம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த 80:20 ஒதுக்கீட்டு முறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கும் ஒரே மாதிரியான தகுதி விதிமுறைகளை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் பெமா காண்டு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தகுதிகள் தொடர்பாக உயர்நிலைக் குழு (High Power Committee) அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் 80:20 முறை நீக்கப்பட்டுள்ளது.

1991 முதல் நடைமுறையில் இருந்த 80:20 முறையின்படி, அருணாச்சலப் பிரதேச அரசுப் பணிகளில் 80 சதவீத பணியிடங்கள் அருணாச்சலப் பிரதேச பட்டியலின பழங்குடியினரான (APST) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத பணியிடங்கள் தகுதியுள்ள பிற வேட்பாளர்களுக்கான திறந்த போட்டி முறையில் நிரப்பப்பட்டு வந்தன.

தற்போது இந்த முறை முழுமையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் (PRC), APST சான்றிதழ் மற்றும் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு பழங்குடியின மொழிகளில் குறைந்தது ஒன்றில் மொழித்திறன் ஆகியவை முக்கிய தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் குரூப் ஏ, பி, சி உள்ளிட்ட அனைத்து நேரடி அரசு பணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால ஆட்சேர்ப்பு அறிவிப்புகளில் இந்த தகுதிகளை கட்டாயமாக இடம்பெறச் செய்ய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு பணியில் சேர்ந்த பிறகும் சம்பந்தப்பட்ட பழங்குடியின மொழியில் தேர்வு நடத்தும் நடைமுறையும் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P