கோவை - மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் 3 மணி 40 நிமிடம் தாமதமாக புறப்படும் - பயணிகள் அவதி
கோவை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் இயக்கப்படும் முக்கிய ரயிலான கோவை - மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் இன்று சுமார் 3 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்
Coimbatore-Mumbai Lokmanya Tilak Express to depart with a delay


கோவை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் இயக்கப்படும் முக்கிய ரயிலான கோவை - மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் இன்று சுமார் 3 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மும்பை லோக்மான்ய திலக் முனையத்தை சென்றடையும். மும்பை செல்லும் பயணிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் நீண்ட தூர பயணம் மேற்கொள்வோர் பெரிதும் நம்பியிருக்கும் இந்த ரயில் சேவை இன்று தாமதமானது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் (Link Rake) குறித்த நேரத்தில் கோவைக்கு வந்து சேரவில்லை. அந்த ரயில் தாமதமாக வந்ததன் காரணமாகவே கோவை - மும்பை எக்ஸ்பிரஸ் புறப்பாட்டிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன் காரணமாக இன்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மாலை 4.10 மணிக்கு பிறகே கோவையில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தாமதம் குறித்த தகவல் கோவை ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், பயணிகள் பொறுமை காக்குமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b