Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பச்சையப்பன் கல்லூரி மாணவர் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜா - மஞ்சு தம்பதியின் மகன்கள் ரஞ்சன் மற்றும் ராகேஷ். இதில் இளைய மகன் ராகேஷ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், மூத்த மகன் ரஞ்சன் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
18 வயதான ரஞ்சன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரது வயது மற்றும் கல்லூரியில் படித்து வருவதை கருத்தில் கொண்டு, திருவள்ளூரில் கவுன்சிலிங் வழங்கி போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, ரஞ்சனுக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக அடிக்கடி செல்போனில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு ரஞ்சனை அவரது நண்பர்கள் சிலர் செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மேலும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இன்று காலை ரஞ்சன் வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டில், சமாதி மீது தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சனை அழைத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P