Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து, காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கபினி அணையின் இந்த உபரி நீர் திறப்பு நேரடியாகக் காவிரி ஆற்றில் கலந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.
கடந்த சில நாட்களாக பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த காவிரி நீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில், இன்று அது 6 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாகவும், அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்ததன் காரணமாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை கர்நாடக நீர்வளத்துறை குறைத்துள்ளது. இதன் நேரடி தாக்கம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் எதிரொலித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள சூழலில், காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b