Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள திமுகவை சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி 4-வது நாளாக கையெழுத்திட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிறைய பெண்கள் தவெகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் சுய உரிமையையும் பாதுகாக்கும் வகையில் இந்த ஆட்சி இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஏறக்குறைய 213 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் 99 சதவீதம் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதேபோல், கோவில்பட்டியிலும் ஒரு பள்ளி மாணவி தவெக நிர்வாகி மீது புகார் அளித்திருந்தார். இன்று கூட தூத்துக்குடியில் தவெக நிர்வாகி மீது ஒரு பெண் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதை எல்லாம் பார்க்கும்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒரு பெரிய பெண்ணியவாதி. பெண்களின் சுதந்திரத்தை மிகப்பெரிய அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதில் அவர் ஒரு எடுத்துக்காட்டு. அதேபோல் தான் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் ஐந்தாண்டு காலம் தனது தொகுதியில் எங்கு பிரச்சனை என்றாலும் உடனடியாக அங்கு சென்று நின்றுவிடுவார்.
ஆனால் இன்று பாதிக்கப்பட்ட பெண் அலங்கோலமாக புகார் அளித்து கண்ணீர் மல்க இருக்கிறார். ஆனால் அங்கு மந்திரி, எம்.எல்.ஏ என யாரும் போகவில்லை. அவரிடம் எதுவும் கேட்கவுமில்லை. அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய அமைச்சரவையில் இருப்பவர்களையும் கண்டிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவெக பிரமுகர்களால் தான் பிரச்சனை என்றும், உயர் மட்ட நிர்வாகிகள் இரவு நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்வதாக ஆதாரப்பூர்வமாக அந்த பெண் நிரூபித்திருக்கிறார். அவருடைய கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும்” என்றார்.
அவரிடம் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாவது குறித்து கேட்டதற்கு, “நோ கமெண்ட்ஸ்” என்று
பதிலளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN