Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்த அனுமதி கோரி, பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.ரமேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பேரணி நடத்த திகவுக்கு அனுமதி இல்லை, பாஜகவுக்கு அனுமதி இல்லை என்றால், தவெகவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பி காவல்துறையின் அணுகுமுறை குறித்து காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவது பாவச்செயலா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கோவை பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ உள்ளதா?” என்றும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பேரணியை அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்துவது தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் பாஜக தேசியக் கொடி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam