உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் – ஆர்.எஸ்.பாரதி நம்பிக்கை
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை போரூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்ப
ஆர்.எஸ். பாரதி


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை போரூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுக கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற கட்சிகள் அனைத்தும் தற்காலிகமாக, ஆறு மாதம் அல்லது 11 மாதம் ‘லீசுக்கு’ சென்றுள்ளதாகவும், லீஸ் காலம் முடிந்த பிறகு கூட்டணி கட்சிகள் மீண்டும் திமுகவிடம் திரும்பி வரும் என்றும் கூறினார். திமுகதான் கூட்டணி கட்சிகளின் ‘ஓனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் திமுகவின் கொள்கைகளை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

1986ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, அதேபோல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திண்டுக்கல் லியோனி, எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் பேசாமல் முதலமைச்சராக இருந்து வருவதாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஒரு கேள்வி கேட்டால் ஆளும் தரப்பினர் வேறு விஷயங்களைப் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam