நெடுஞ்சாலை முறைகேடு வழக்கு: எ.வ.வேலுவுக்கு எதிரான இடைக்கால உத்தரவு நீட்டிப்பு
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) நெடுஞ்சாலை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த
உயர்நீதிமன்றம்


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெடுஞ்சாலை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைப் பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5,000 கோடி ஒதுக்கியிருந்தது. இந்த திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளாமலேயே தனியார் நிறுவனங்களுக்கு தொகைகள் விடுவிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில்மனு தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார்.

மேலும், எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam