ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
விருதுநகர், 14 ஆகஸ்ட் (ஹி.ச) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றும், பூமிப்பிராட்டியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த புண்ணிய ஸ்தலமுமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில், ஆண்டின் மிக முக்கிய திருவிழாவான ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தே
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்


விருதுநகர், 14 ஆகஸ்ட் (ஹி.ச)

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றும், பூமிப்பிராட்டியின் அம்சமான ஆண்டாள் அவதரித்த புண்ணிய ஸ்தலமுமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில், ஆண்டின் மிக முக்கிய திருவிழாவான ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு தேர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் வடபத்ரசயனர் எனப்படும் ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பெரியாழ்வார் வழங்கியதாக பரம்பரையாக கூறப்படும் பிரம்மாண்டமான திருத்தேரில் ரெங்கமன்னார் உடன் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளினார். இந்த தலத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒருசேர காட்சி அளிப்பது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

காலை 9 மணியளவில் பக்தர்களின் “கோவிந்தா, கோபாலா” என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் எனப்படும் மாட வீதிகள் வழியாக நகரை வலம் வந்த தேர், பின்னர் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே பக்தி வெள்ளத்தில் மிதந்தது.

பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் நான்கு ரத வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

Hindusthan Samachar / vidya.b