Enter your Email Address to subscribe to our newsletters

டெல்லி, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் வீரதீரச் செயல் புரிந்தும், அர்ப்பணிப்புடன் சேவையாற்றியும் வரும் வீரர்களுக்கான பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, குடிமை தற்காப்புப் படை, திருத்தம் மற்றும் மறுவாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1,057 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
இவர்களில் உயிரைப் பணயம் வைத்து தீவிரவாத ஒழிப்பு, குற்றத் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளில் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்திய 272 காவல்துறை பணியாளர்களுக்கும், தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்ட 29 தீயணைப்பு துறை வீரர்களுக்கும் வீர தீரத்திற்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர நீண்ட காலமாக களங்கமற்ற, அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் சிறப்பு சேவைப் பதக்கம் மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஊர்க்காவல் படை மற்றும் குடிமை தற்காப்பு படையினர் பேரிடர் காலங்களிலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியிலும் காவல்துறைக்கு உறுதுணையாக இருந்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கும் இந்த பட்டியலில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
விருது பெறுவோரின் முழு பட்டியல் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், வரும் சுதந்திர தின விழாவில் இந்த பதக்கங்கள் முறைப்படி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b