Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 7,833 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 6,247 கன அடியாக சரிந்துள்ளது.
நீர்வரத்து குறைந்த போதிலும் அணையின் நீர்மட்டம் சீராக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.70 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 42.65 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் தற்போது பாதிக்கும் மேல் நீர் இருப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இதனிடையே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நீர் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b