Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர்களது 6 வயது மகள் ரிதன்யா, அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காக ரிதன்யா சேலை அணிந்து கொண்டு இன்று காலை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார்.
துடியலூர் அடுத்த சேரன் காலனி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தாயும் மகளும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பின்னால் அதே திசையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் ஹேண்டில்பார் லாரியில் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய திவ்யா இருசக்கர வாகனத்துடன் சாலையின் இடதுபுறமாக விழுந்துள்ளார். ரிதன்யா சாலையின் வலதுபுறமாக விழுந்த நிலையில், லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, தாய் கண் முன்னேயே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகள் உயிரிழந்ததை நேரில் பார்த்த தாய் திவ்யா கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தாய் திவ்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam