அய்யனார் கோவில் தேர் இழுக்கும் போது மின்சாரம் பாய்ந்து இரண்டு பேர் உயிரிழப்பு
பெரம்பலூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.) பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள நன்னை கிராமத்தில் ஏரிக்கரை அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான குலதெய்வ கோயில் ஆகும். ஆடி மாதத்தில் திருவிழா நடத்துவதற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண
Kunnam


பெரம்பலூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள நன்னை கிராமத்தில் ஏரிக்கரை அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான குலதெய்வ கோயில் ஆகும்.

ஆடி மாதத்தில் திருவிழா நடத்துவதற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்ட சகடை தேரினை புதிதாக செய்துள்ளனர். அதற்கான வெள்ளோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற இருந்தது.

அதற்காக அந்த கோவிலில் உள்ள சுமார் 20 அடி உயரம் உள்ள சகடையை (சிறிய அளவிலான தேர்) அலங்காரம் செய்து சாமியை ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக இரவு கோவிலின் அருகே இழுத்து வந்து நிறுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இரவு நேரம் என்பதால், மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தேரின் உச்சியில் உள்ள கூம்பு பகுதி உரசியது. இதில் மின்சாரம் தேர் முழுவதும் பாய்ந்தது.

அப்போது தேரை இழுத்து வந்த அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை (40) மற்றும் பரமசிவம் (41) ஆகியோர் உடல் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி பலியானார்கள்.

ராசு என்பவர் படுகாயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் உயிரிழந்த இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN