திருமங்கலம் அருகே கோவிலில் 60 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை, திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ரகுபதி கொண்டம்மாள் - கிருஷ்ண கொண்டம்மாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 60 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 108 விளக்க
அம்மன்


மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை, திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ரகுபதி கொண்டம்மாள் - கிருஷ்ண கொண்டம்மாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 60 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

ஆடி மாதத்தில் பூச நட்சத்திரம் கூடும் நன்னாளை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள இக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 60 ஆயிரம் வளையல்களால் கோவில் திருவாட்சி போன்ற வடிவில் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த வளையல் திருவிழாவில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு 108 விளக்கு பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக, இக்கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதை முக்கிய நிகழ்வாகக் கருதி வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டதுடன், வளைகாப்பு சாதங்கள் அன்னதானமாகவும் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த சிறப்பு விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam