வெளிநாடுகள் போன்று இந்தியாவிலும் கம்யூனிசத்தை வென்றெடுக்க வேண்டும் - பெ.சண்முகம்
சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை, தியாகராய நகரில் உள்ள சர் பி. டி தியாகராயர் அரங்கத்தில் தமிழ்நாடு கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு சார்பாக ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
CPIM Shanmugam


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை, தியாகராய நகரில் உள்ள சர் பி. டி தியாகராயர் அரங்கத்தில் தமிழ்நாடு கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு சார்பாக ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், நடிகை ரோகினி மற்றும் இந்தியாவிற்கான கியூபா நாட்டின் தூதர் யோவான் கார்லோஸ் மார்சன் அகுய்லேரா ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், ”எல்லா கம்யூனிஸ்ட்களுக்கும் சுரண்டல் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதுதான் விருப்பமும், கனவாகவும் இருக்கும். கியூபா, வியட்நாம், ரஷ்யா, வடகொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் 20ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வென்றெடுத்தது.

அதே போல், இந்தியாவிலும் கம்யூனிசத்தை வென்றெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைத்து வருகிறது. சேகுவேரா, ஃபிடல் என்று சொன்னாலே ஒரு ஊக்கம் வரும் அல்லவா? அதுபோன்று புரட்சிகரமான ஆற்றலை உருவாக்குவதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய பணியாக இருக்க வேண்டும்.

கியூபாவில் கம்யூனிசம் ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பிறகாக, எல்லா விதமான தடைகளையும் அமெரிக்கா, கியூபா மீது விதித்து வருகிறது. எத்தனை தடைகளை போட்டாலும் ஃபிடல் காஸ்ட்ரோ முதல் தற்போது இருக்கும் பிரதமர் வரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கம்பீரமாக எதிர்கொண்டு வருகின்றனர்.

ஈரனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக நடக்கும் யுத்தம் நமது பிரச்சினை இல்லை என்று நினைக்காமல், இது ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சனை என்று மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கும் என்பது தான் கியூபாவின் கொள்கை. அதே போல், இந்தியாவிலும் ஃப்பிடல் காஸ்ட்ரோ வழியில் சோசியலிசத்தை வென்றெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN