இந்தியா கூட்டணியில் தவெக வரும் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்
மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நான்கு புதிய பேருந்து வழித்தடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த த
Minister Vishwanathan


மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நான்கு புதிய பேருந்து வழித்தடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரண்டு நாட்களுக்கு முன்பு அவமதிக்கப்பட்ட சம்பவம், தன்னை போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து, 18 வயது முதல் சாதாரண நிலையில் இருந்து உயரிய அரசியல் பதவிக்கு வந்த கார்கே அமர்ந்திருந்த நாற்காலிக்கு தண்ணீர் தெளித்து, ஹோமம் நடத்தி புனிதப்படுத்திய சம்பவம் மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சியினரையும், பிறரையும் அவமதிக்கும் செயல் என கூறினார்.

கார்கே அவர்களே, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும், இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடைபெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் ராகுல் காந்திக்கும் நடைபெற்றுள்ளதாக கூறிய அமைச்சர், இந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடி மல்லிகார்ஜுன கார்கேவிடம் நடந்த விசயத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சர் சபையில் இடம்பெற்று இருந்த போதிலும் நாட்டில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது எங்களை மிகவும் மன வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.

வரும் 17ஆம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி செயல்படுவேன் என அமைச்சர் பதிலளித்தார்.

தமிழ் மக்களை மூன்றாம் குடிமக்களாகவும், தமிழ் மொழியை மூன்றாம் தர வரிசையிலும் மத்திய அரசு நடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு தனியாக தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலைக்கு மத்திய அரசு நம்மை ஆட்படுத்தியுள்ளதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “சகோதரி கனிமொழி அவர்கள் டீ சாப்பிடுவதற்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். அவர் மட்டும் ஏன் கலந்து கொண்டார், மற்றவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து எனக்கு தெரியாது” என பதிலளித்தார்.

மேலும், “இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் வர வேண்டும், வரலாம், வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN