நன்னிலம் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை
திருவாரூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்த நிலையில், அப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக நன்னிலம் அருகே
பயிர்கள் சேதம்


திருவாரூர், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்த நிலையில், அப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது.

இதன் காரணமாக நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், மாப்பிள்ளைக்குப்பம், பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை சாகுபடி நெற்பயிர்கள் சாய்ந்தன. வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மும்முனை மின்சார பற்றாக்குறை, கோடை வெயிலின் தாக்கம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நன்னிலம் பகுதியில் இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யப்பட இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு சேதங்களை கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam