இரட்டை மாட்டு வண்டி பந்தய விவகாரம் - பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தஞ்சாவூர் ஆட்சியருக்கு உத்தரவு
மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த சந்திரபாலன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டுவண்டி பந்தயம், குதிரை வண்டி பந்
Madurai High Court


மதுரை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த சந்திரபாலன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்,

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டுவண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் நடத்த பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை 12- ஆம் தேதி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதில் பல்வேறு நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், காவல்துறை டிஎஸ்பி மணிமாறன், பேராவூரணி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் தனபாலன், கால்நடைத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், உதவிப் பொறியாளர் திருசெல்வம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், நிபந்தனைகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டியை ஏற்பாடு செய்தவர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இனி வரும் காலங்களில் இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகளை மீற மாட்டோம் எனக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN