Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை சொத்து வரி உயர்வை முழுமையாகக் கைவிடாவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. பச்சையாகப் பொய் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருந்த அவருக்கு மற்றவர்களை விமர்சிக்க எந்த யோக்கியதையும் கிடையாது” என விமர்சித்துள்ளார்.
மேலும், நிர்மல் குமார் ஆர்எஸ்எஸ், அதிமுக ஆகியவற்றில் இருந்து தற்போது தவெகவில் இருப்பதாகவும், கட்சி மாறுவதை வழக்கமாக கொண்டவர்கள் சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி வருவதாகவும், இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுக வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஆர்.எஸ்.பாரதி, மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளதாகவும், நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“சென்னையில் சொத்து வரி உயர்வை முழுமையாகக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என அவர் எச்சரித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், கோவை மாணவர் கொலை மற்றும் தூத்துக்குடி பெண் பாதிக்கப்பட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களிலும் ஆளும் அரசை ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்தார்.
இறுதியாக, விஜய்க்கு அறிவுரை கூறிய அவர், பல கட்சிகளுக்குச் சென்று வந்தவர்களை அருகில் வைத்துக் கொள்வது ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், “கூடா நட்பு கேடாய் முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam