இபிஎஸ் உத்தரவுப்படி சேலம் போராட்டத்தில் தங்கமணி பங்கேற்பு – எஸ்.பி.வேலுமணி அணியில் கருத்து வேறுபாடா?
சேலம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டங்களை அந்தந்த நிர்வாகிகளின் சொந்த மாவட்டங்களி
தங்கமணி


சேலம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது.

அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டங்களை அந்தந்த நிர்வாகிகளின் சொந்த மாவட்டங்களில் நடத்தாமல், வேண்டுமென்றே வேறு மாவட்டங்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருந்தனர்.

மேலும், போராட்டத்திற்கு தங்களது ஆதரவு தொடரும் என்றும், ஆனால் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்க மாட்டோம் என்றும் இருவரும் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் உள்ள தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் தங்கமணி சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நெருக்கமாகக் உள்ள தங்கமணி போராட்டத்தில் பங்கேற்றது அதிமுகவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், எஸ்.பி.வேலுமணி அணியிலேயே கருத்து வேறுபாடு நிலவுகிறதா? அல்லது தங்கமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசப் பாதையில் செல்கிறாரா? என்ற கேள்விகள் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P