Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12ஆம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு மாணவர் தான் வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவரை குத்தியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றதாக கூறப்படுவதால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்தில் காயமடைந்த மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாலைக்கிராமம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட காரணம் என்ன, கத்தி பள்ளி வளாகத்திற்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது, சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்திலேயே மாணவருக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடையே ஏற்படும் தகராறுகள் வன்முறையாக மாறுவதைத் தடுக்க பள்ளி நிர்வாகமும் கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam