Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வீட்டு மற்றும் பிற மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான புதிய டெண்டர்களை இந்த மாத இறுதியில் வெளியிட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த டெண்டர்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதற்கட்டமாக சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள வீட்டு மின் நுகர்வோர்களுக்காக 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 50 லட்சம் தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான நிதி ஏற்பாட்டின்படி, ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசு ரூ.900 வழங்கும் என்றும், மீதமுள்ள தொகையை மாநில அரசு ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு ஸ்மார்ட் மீட்டரின் விலை சுமார் ரூ.6,000 முதல் தொடங்குவதாக கூறப்படும் நிலையில், புதிய டெண்டர் வெளியிடப்பட்டு ஏலம் நிறைவடைந்த பின்னரே கொள்முதல் விலை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டெண்டர் வெளியிடப்பட்டு கொள்முதல் நடைமுறைகள் தொடங்கியதும், ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகளும் தொடங்கும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு முறை விரைவில் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P