Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலுக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோயிலை அடைய பக்தர்கள் சுமார் 1,300 படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதி மூலம் பக்தர்கள் எளிதாக மலைப்பகுதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ரோப்கார் பெட்டியில் ஒரே நேரத்தில் 4 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், சென்று வருவதற்கான கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக வயதான பக்தர்கள் மற்றும் உடல்நலக் காரணங்களால் படிகளில் ஏறிச் செல்ல முடியாதவர்களுக்கு இந்த ரோப்கார் சேவை பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரோப்கார் இயந்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களின் ஆண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனையடுத்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 22 நாட்களுக்கு ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை வழக்கம்போல் மீண்டும் இயக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோப்கார் சேவை நிறுத்தப்படும் காலகட்டத்தில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், மலைக்கோயிலை அடைய படிப்பாதையை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
எனவே, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ள பக்தர்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு வருமாறு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படும் போது, வழக்கம்போல் பக்தர்கள் எளிதாக மலைக்கோயிலுக்குச் சென்று லட்சுமி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN