Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் உள்ள குருத்வாராவில் நேற்று தாக்குதலுக்கு உள்ளான ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சிகிச்சைக்குப் பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
வலது கையில் கட்டுடன் மருத்துவமனைப் படிக்கட்டுகளில் இறங்கி வந்த அவர், தான் முழுமையாக நலமாக இருப்பதாகவும், தாக்குதலுக்கு பயப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சுக்பீர் சிங் பாதல், அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடன் இருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு பயமில்லை” என்றார்.
மேலும், பஞ்சாபிலும் நாட்டிலும் அமைதி நிலவுவதை விரும்பாத பல சக்திகள் இருப்பதாகவும், ஷிரோமணி அகாலி தளம் தங்களது நோக்கத்துக்கு தடையாக இருப்பதாக அந்த சக்திகள் கருதுவதாகவும் சுக்பீர் சிங் பாதல் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, நாந்தேட்டில் உள்ள மாதா சாஹிப் குருத்வாராவுக்கு நேற்று சென்றிருந்தபோது, சுக்பீர் சிங் பாதலை நிஹாங் சீக்கியர் உடையில் இருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதம், குறிப்பாக கிர்பான் மூலம் தாக்க முயன்றார். பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு தாக்குதலைத் தடுத்தனர். இந்தச் சம்பவத்தில் பாதலின் வலது கையில் காயம் ஏற்பட்டதுடன், தாக்குதலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.
தாக்குதலில் காயமடைந்த பாதலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவர்கள் காயமடைந்த தசைநார் மற்றும் ரத்த நாளப் பகுதியில் சிகிச்சை அளித்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P