Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட சொத்துவரி; பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு – நிதி நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா?
சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது?
ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்?
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு ஆகியவையும் அந்தத் தொகையில் அடங்குமா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b