Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஓராண்டு கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆண்டுதோறும் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA, உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் துணைத்தேர்வுகளைப் போல, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை துணைத்தேர்வு நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்ததால், அவர்களின் ஓராண்டு கல்வி வீணாகாமல் இருக்க சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் மு.தமிமுன் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் அக்டோபர் மாதத்தில் துணைத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுவதால், தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பாலிடெக்னிக் மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் இருக்க, இந்த ஆண்டும் உடனடியாக துணைத்தேர்வு நடத்துவதுடன், இனிவரும் ஆண்டுகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் துணைத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பெ.விஸ்வநாதனிடம் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ