Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பழைய பஸ்தியில் மின்சார கட்டணம் வசூலிப்பது மற்றும் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு, தெலங்கானா பா.ஜனதா தலைவர் ராம்சந்தர் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
பழைய பஸ்தியில் சிறுபான்மையினர் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றும், அவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மின்சார கட்டணம் செலுத்தாதவர்களிடம் அரசு ஏன் பரிவு காட்டுகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விதிமுறைகளை மீறியதாக கூறி ஏழை இந்து குடும்பங்களின் வீடுகள் மீது ஹைட்ரா மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், மின்சார கட்டணம் செலுத்தாத சிறுபான்மையினரிடம் மட்டும் அரசு பரிவு காட்டுவது ஏன் என்றும் ராம்சந்தர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபுறம் ஏழை இந்து குடும்பங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் அரசு, மறுபுறம் சிறுபான்மையினர் மின்சார கட்டணம் செலுத்தாததை ஆதரிப்பது போல் பேசுகிறது. இது காங்கிரஸ் அரசின் வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து மக்களின் நலன்களை புறக்கணித்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல என்றும், கடந்த காலம் முதல் தற்போது வரை அந்த கட்சியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ராம்சந்தர் ராவ் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA