Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச)
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உழைப்பாளர் சிலை, போர் நினைவுச் சின்னம், காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் பொது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலையில் சிவப்பு மற்றும் ஊதா நிற வாகன அனுமதி அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதி அட்டை வைத்துள்ள வாகனங்கள் காலை 8.10 மணி வரை ராஜாஜி சாலை வழியாக தலைமைச் செயலகத்திற்கு செல்லலாம். காலை 8.10 மணிக்கு மேல் வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம் வரை செல்ல அனுமதி இல்லை.
அதேபோல், நீலம் மற்றும் பிங்க் நிற அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் கொடிமரச் சாலை, முத்துசாமி சாலை வழியாக பாரிமுனை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்ல விரும்புவோர், உழைப்பாளர் சிலையிலிருந்து முத்துசாமி சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனுமதி அட்டை இல்லாத பொது வாகனங்கள் வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக சென்று தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b