Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன் , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சமோலி மாவட்டம் பிபல்கோட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டத்துக்கான சுரங்கத்துக்குள் நேற்று மாலை திடீரென வெள்ளநீர் புகுந்தது. தண்ணீருடன் மண், கற்கள் மற்றும் குப்பைகளும் சுரங்கத்துக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
அப்போது சுரங்கத்துக்குள் சுமார் 28 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளநீர் பெருக்கெடுத்து வந்ததால் தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தீவிரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் இதுவரை 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 7 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
3 தொழிலாளர்கள் தொடர்ந்து சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கத்துக்குள் குவிந்துள்ள மண், கற்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
வருகிற 17-ந்தேதி வரை உத்தரகாண்டில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மீட்புப் பணிகளிலும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியுள்ள 3 தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA