Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என சாபமிடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியினர், அரசுத் திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ள வானதி சீனிவாசன், தற்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்கு சென்றிருப்பது என்ன மனநிலை என கேள்வி எழுப்பியுள்ளார்.
“மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுகவினர் மறக்கக் கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகளின் மேடைகள் அவர்களின் வீடுகள் அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து அரசியல் நாகரீகத்துடன் பேச திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P