Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றிய தாமரைச்செல்வி, பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரது கணவர் அரவிந்தனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பப் பிரச்சினை தொடர்பாக இருதரப்பிலும் காவல்துறையின் கவனத்திற்கு புகார்கள் சென்றிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சினை உயிரைப் பறிக்கும் அளவுக்கு தீவிரமடைந்ததைத் தடுக்க காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, ஜூலை 29ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் அரவிந்தனின் சகோதரரின் மனைவி சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், காவல்துறையின் முன்கூட்டிய தலையீடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த நிலையில், மறுபுறம் அதே குடும்பச் சூழலில் ஒரு பெண் காவலரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எச்சரிக்கை மணிகள் ஒலித்த பிறகும் ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அந்தத் தவறுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்” என தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், தாமரைச்செல்வியின் உயிரிழப்பை ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சோகமாக மட்டும் கடந்து செல்ல முடியாது என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையின் செயல்முறைகளையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய சம்பவம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமரைச்செல்வியின் உயிரைப் பறித்த குற்றவாளி மீது சட்டத்தின் முழுக் கடுமையுடன் நடவடிக்கை எடுத்து விரைந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், சம்பவத்திற்கு முன்பாக காவல்துறையின் கவனத்திற்கு வந்த அனைத்து புகார்கள், அவற்றின் தன்மை மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆபத்து இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தும் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது துறைரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப வன்முறை, அச்சுறுத்தல் உள்ளிட்ட புகார்களை சாதாரண குடும்பத் தகராறாகக் கருதாமல், உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை மதிப்பிட்டு உடனடியாக பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை காவல்துறை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தாமரைச்செல்வியின் குடும்பத்தினருக்கு உரிய அரசு நிவாரணமும், அவரது பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆதரவும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றிய ஒரு பெண்ணின் உயிரே பறிக்கப்பட்டுள்ளது. புகார்கள் காவல்துறையின் கதவைத் தட்டிய பிறகும் ஒரு கொலை நிகழ்ந்திருந்தால், அந்தப் புகார்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கான பதிலை மக்களுக்கு வழங்க வேண்டும். தாமரைச்செல்வியின் மரணத்திற்கு நீதி மட்டுமல்ல; இந்த மரணத்திற்கு வழிவிட்டிருக்கக்கூடிய அலட்சியத்திற்கும் பொறுப்புக்கூறல் வேண்டும்” என தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ