Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
மணிப்பூரில் இருந்து லார் கிப்பான் குரங்குகளைப் பெற்றதாகக் கூறப்படும் கேசவநாதனுக்கு, அவற்றை பெற்ற 15 நாட்களுக்குள் பதிவு செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் தொடர்பாக வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், குரங்குகள் தொடர்பான முறையான ஆவணங்கள் இல்லை எனத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லார் கிப்பான் குரங்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடனும் ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேசவநாதனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மணிப்பூரில் இருந்து மூன்று லார் கிப்பான் குரங்குகளை வாங்கியதாகக் கூறப்படும் கேசவநாதன், இன்று ஆவணங்களுடன் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது கேசவநாதன் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும், ஆனால் அவற்றை உரிய காலத்திற்குள் பதிவு செய்யாமல் தாமதமாகப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேசவநாதன் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடிகர் விக்ரமிடமும் ஏற்கனவே சென்னையில் உள்ள வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லார் கிப்பான் குரங்குகளை பறிமுதல் செய்வது தொடர்பாக மாநில தலைமை வன அலுவலர் முடிவு செய்வார் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P