சுதந்திர தின விழா – சிறப்புக் கட்டுரை!
தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (15 ஆகஸ்ட் 2026) நாடு முழுவதும் மிகுந்த தேசபக்தியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரித்தானிய Colonial ஆட்சியில் இருந்து இந்த
_


தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று (15 ஆகஸ்ட் 2026) நாடு முழுவதும் மிகுந்த தேசபக்தியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரித்தானிய Colonial ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்றதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதன் முறையாக தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார்.

தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பாரதப் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தேசிய உணர்வுடன் கொண்டாடுகிறோம்.

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட பல தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினர். தமிழகத்திலும் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பலர் நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் மக்களிடம் வளர்த்தனர்.

சுதந்திரப் போராட்டத்தில் பலர் தங்களது செல்வத்தையும், சொத்துகளையும் மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தின் விளைவாகவே இன்று நாம் சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்த உரிமை மட்டுமல்ல; அது நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பும் ஆகும். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும், தியாகிகளின் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், பொதுச் சொத்துகளை காப்பதும், கல்வி மற்றும் அறிவின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதும் உண்மையான தேசப்பற்றாகும்.

“நாடு நமக்கு என்ன செய்தது?” என்பதைக் காட்டிலும், “நாட்டிற்காக நாம் என்ன செய்ய முடியும்?” என்ற எண்ணத்தை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுதந்திர தினம் என்பது வெறும் கொடியேற்ற விழா அல்ல. நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளும், நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க உறுதிமொழி எடுக்கும் நாளும் ஆகும். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்த்து, வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

ஜெய் ஹிந்த்!

வந்தே மாதரம்!

Hindusthan Samachar / Durai.J