Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் மாநில மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திரத்திற்காக பல ஆண்டுகள் போராடிய தலைவர்களின் தியாகத்தால்தான் நாம் சுதந்திரத்தை பெற்றோம். 80 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் கண்ட கனவுகளை நனவாக்கி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவையும், ஆந்திரப் பிரதேசத்தையும் முன்னணி இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளை நாட்டின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்போம் என்று உறுதி ஏற்போம். பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள ‘வளர்ந்த இந்தியா’ இலக்கும், நாம் நிர்ணயித்துள்ள ‘தங்க ஆந்திரா’ இலக்கும் ஒன்றுக்கொன்று மாறானவை அல்ல. இந்த இரு இலக்குகளையும் அனைவரும் ஒன்றிணைந்து அடைய வேண்டும்.
கடந்த ஆட்சியில் 30 ஆண்டுகள் பின்னடைவு
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மாநிலம் பல்வேறு துறைகளில் கடுமையான பாதிப்பை சந்தித்தது.
முந்தைய ஆட்சியாளர்களின் அகங்காரம், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டால் ஆந்திரப் பிரதேசம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. பொருளாதார ரீதியாகவும் மாநிலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தை மீண்டும் கட்டமைக்கும் பணியை ஏற்றுக்கொண்டோம்.
கடந்த 26 மாதங்களில் சீரழிவில் இருந்து வளர்ச்சிக்கும், நெருக்கடியில் இருந்து நிலைத்தன்மைக்கும் மாநிலத்தை கொண்டு வந்துள்ளோம்.
ஆரோக்கியமான, வளமான, மகிழ்ச்சியான ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
மத்திய அரசின் ஒத்துழைப்புடன் போலவரம், அமராவதி, விசாகப்பட்டினம் உருக்காலை, ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசின் கடன்களை மறுசீரமைத்ததன் மூலம் ரூ.8,269 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 28 புதிய தொழில் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.24 லட்சம் கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.14 லட்சம் கோடி முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 11 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
கூகுள் ஏ.ஐ. டேட்டா சென்டர், ஆர்செலார் மிட்டல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், தால்மியா சிமெண்ட், ஹீரோ, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய உள்ளன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மெகா டி.எஸ்.சி. மூலம் 15,941 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இனி ஆண்டுதோறும் டி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படும்.
ஏற்கனவே 10 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயம், பாசனத்திற்கு முக்கியத்துவம்
விவசாயிகளின் நலனுக்காக ‘அன்னதாதா சுகீபவா’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் ராயலசீமாவை தோட்டக்கலை மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மதனப்பள்ளியில் விரைவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
கடந்த 26 மாதங்களில் பாசனத் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் 36 பாசனத் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகால கனவான வெலிகொண்டா முதல் கட்டத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
வம்சதாரா–நாகாவளி நதிகள் இணைப்புப் பணிகள் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
அடுத்த ஆண்டு புஷ்கர விழாவிற்குள் போலவரம் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்போம் என்று சந்திரபாபு உறுதியளித்தார்.
அமராவதி உலகத் தரம் வாய்ந்த நகரமாகும்
5½ கோடி ஆந்திர மக்களின் சுயமரியாதையின் அடையாளமாக அமராவதியை உலகத் தரம் வாய்ந்த தலைநகரமாக உருவாக்குவோம். ராமாயபட்டினம், மச்சிலிப்பட்டினம், மூலப்பேட்டை ஆகிய இடங்களில் பசுமை துறைமுகங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தில் ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே பணிகளும், ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வளர்ச்சியுடன் நலத்திட்டங்கள்
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘ஸ்வயம்’ பிராண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இலவச மணல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நில உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி மதுபானத்திற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களின் நலனுக்காக ரூ.30,849 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ‘ஈகிள் டாஸ்க் போர்ஸ்’ மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வளர்ச்சியில் இருந்து வளம் நோக்கி ஆந்திரப் பிரதேசத்தை கொண்டு சென்று, 2047-ம் ஆண்டுக்குள் ‘தங்க ஆந்திரா’வை உருவாக்குவதே அரசின் இலக்கு என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
முன்னதாக,காவல்துறையினருக்கு பதக்கங்கள்
சுதந்திர தின விழாவில் ஆந்திர சிறப்பு காவல்படை, மத்திய ரிசர்வ் காவல்படை, கர்நாடக காவல்துறை, என்.சி.சி. மற்றும் ஸ்கவுட்ஸ் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
விவசாயம், கல்வி, மருத்துவம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றத்தை விளக்கும் வகையில் அரசு துறைகளின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
விழாவின் நிறைவில், பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA