Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான விருது பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான விருதை கோவை மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளன. குப்பை மேலாண்மை, குடிநீர் விநியோகம், வரி வசூல், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த விருதுக்கு இரண்டு மாநகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர், ஆரணி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று நகராட்சிகள் பெற்றுள்ளன. தூய்மை பணிகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த நகராட்சிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
சிறந்த பேரூராட்சிக்கான விருது திருவிடைமருதூர் மற்றும் கருங்கல், செட்டிபாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிய உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும், நிர்வாகத் திறன் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இவை முன்மாதிரியாக திகழ்வதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக செயல்படும் திறனை மதிப்பிட்டு வழங்கப்படும் சிறந்த மண்டலத்துக்கான முதல் பரிசை 6-வது மண்டலம் பெற்றுள்ளது.
சென்னையில் தூய்மை, பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதில் இந்த மண்டலம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b