Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என சென்னை தொலைபேசி வட்ட தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக 5ஜி சேவைக்கு தயாராகி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் அனைத்தும் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜி டவர்களாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் 5ஜி சேவைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்கனவே 5ஜி டவர் சோதனைகள் தொடங்கப்பட்டு, புதிய பேஸ் டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றது.
தற்போது தமிழகத்தில் 4ஜி சேவையை முழுமையாக வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் 620 கிராமங்களில் 4ஜி சேவை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 254 புதிய செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை பொது மேலாளரின் தற்போதைய அறிவிப்பு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஓராண்டுக்குள் தமிழகம் முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும்போது, குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவையை பொதுமக்கள் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b