ஈரோட்டில் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம்
ஈரோடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரோடு அருகே கீழ் பவானி கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே கட
ஈரோட்டில் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம்


ஈரோடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரோடு அருகே கீழ் பவானி கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையிலிருந்து வெளியேறும் கீழ் பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த கால்வாய் சுமார் 125 மைல் நீளத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் மண்டல பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் எள், மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை கண்டித்தும், உடனடியாக கீழ் பவானி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இன்றும் போராட்டம் நீடிப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b