Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்குப் பிரதமர் மோடி வருகை தந்தார்.
புதுச்சேரியிலும் சுதந்திர தின விழா இன்று மிகுந்த எழுச்சியுடனும் தேசபக்தி உணர்வுடனும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதலில் அவர் காவல்துறை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கம்பீரமாக பறக்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்,
சுதந்திர போராட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்ததுடன், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b