Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தாய்நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு தனித்துவமான, மகத்தான இடம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் தமிழக மண்ணிலிருந்து வலிமை பெற்றதாக தெரிவித்துள்ளார். தியாகிகள் கண்ட கனவுகளை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் எனவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P