Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தனது பணிவான அஞ்சலியை அவர் செலுத்தியுள்ளார்.
கடந்த 79 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு சாதனைகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கார்கே, நாடு பலவற்றை சாதித்திருந்தாலும், இன்னும் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமே சுதந்திரம் அல்ல என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பின் உத்தரவாதமே உண்மையான சுதந்திரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவே இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாகவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் வலிமையான பாதுகாப்பாகவும் உள்ளது என கார்கே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியலமைப்பின் மதிப்புகள், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் முன் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்க அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் கடின உழைப்புக்கு உரிய மரியாதையும் நீதியும் கிடைக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு சம உரிமையும், அதிகாரமளிக்கப்பட்ட பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் அனைவருக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள சமத்துவம் மற்றும் நீதிக்கான முழுமையான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுதந்திர தினத்தில் நம்பிக்கையே தங்களின் மிகப்பெரிய உறுதிமொழி எனத் தெரிவித்துள்ள கார்கே, இளைஞர்களின் உரத்த குரலிலும், விவசாயிகளின் உழைப்பிலும், பெண்களின் துணிச்சலிலும், ஒன்றிணைந்து அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியும் என்ற கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையிலும் அந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குரலும் மதிக்கப்படும், ஒவ்வொரு கனவுக்கும் வாய்ப்பு கிடைக்கும், ஒவ்வொரு இந்தியரும் முன்னேற்றத்திற்கான சம உரிமையைப் பெறும் சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம் எனவும் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
“ஜெய் ஹிந்த்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P