ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைய
Iti


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அவகாசம் ஆகஸ்ட் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களில் கடந்த ஆண்டுகளில் சுமார் 95 சதவீதம் பேர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ITI பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், ITI-யில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தேர்வராக தேர்ச்சி பெற்றால், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. ITI முடித்தவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், ITI மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படுகிறது. இதுதவிர, விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பயிற்சி கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அரசு ITI-களில் விடுதி வசதியும் உள்ளது.

எனவே, தகுதியுள்ள மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று, விருப்பமான தொழிற்பிரிவைத் தேர்வு செய்து சேர்க்கை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ