Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்டமுகிலாளம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அருகிலுள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12-ம் தேதி மாலை பள்ளி முடிந்து சுமார் 5 மணியளவில் சிறுமி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
நடுவன்போர்டு கிராமம் அருகே தனியாக சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியின் கண்கள் மற்றும் வாயை மூடி, அவரை அருகிலிருந்த புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். அழுதபடி வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு மாடு மேய்த்து வந்த அந்த சிறுவன், சிறுமியை தொடர்ந்து நோட்டமிட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தக் காவல் நடைமுறைகளின்படி அடைத்தனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam