மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 49-வது பிறந்தநாள் விழா
மதுரை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 49-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ரயில் ஆர்வலர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர். மதுரையிலிருந்து சென்னை செல்லும் அதிவேக ரயில்களில் முக்கியமானதாக வி
ரயில்


மதுரை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 49-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ரயில் ஆர்வலர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் அதிவேக ரயில்களில் முக்கியமானதாக விளங்கும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு தனது சேவையை தொடங்கியது. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள், ரயில் சேவை தொடங்கிய நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மதுரை ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாலை அணிவித்து, எலுமிச்சம்பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டி, கேக் வெட்டி ரயிலின் பிறந்தநாளை கொண்டாடினர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கிய காலத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் முதல், தற்போது ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் வரை பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், வைகை எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய வந்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி, ரயிலின் 49-வது ஆண்டு விழா வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மதுரையின் பாரம்பரியத்தையும், ரயில் மீதான மதுரை மக்களின் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam