Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரியில் இன்று காலை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் என். ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பால் உற்பத்தியை பெருக்கவும், பாண்லே நிறுவனத்தை வலுப்படுத்தவும் இரண்டு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட நவீன பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ரூபாய் 112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது புதுச்சேரியில் சுமார் 8400 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 30 பால் குளிரூட்டும் மையங்கள் மூலம் தினமும் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலையில், தேவை நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் லிட்டராக உள்ளது.
இந்த இடைவெளியை குறைத்து உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த புதிய தொழிற்சாலை உதவும் என அரசு எதிர்பார்க்கிறது.
அதேபோல், பாண்லே நிறுவனம் மூலம் தினமும் 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை ரூபாய் 34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
ஏற்கனவே குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையமான அமுல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாண்லே தினமும் 10 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து வருகிறது. அமுல் நிறுவனத்திற்கு தேவையான 52-க்கும் மேற்பட்ட வகையான ஐஸ்கிரீம்களை பாண்லே தயாரித்து வரும் நிலையில், இந்த திறனை இரட்டிப்பாக்கவும், கோன் ஐஸ்கிரீம் உற்பத்தியை தொடங்கவும், விரைவாக கெட்டிப்படுத்தும் வசதியை ஏற்படுத்தவும் இந்த புதிய கூடம் அமைக்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகளுக்கான தீவனம், செயற்கை முறை கருவூட்டல், நோய் தடுப்பு பணிகள் மற்றும் அரசின் 75 சதவிகித மாட்டுத்தீவன மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.
இந்த இரண்டு தொழிற்சாலைகளும் செயல்பாட்டுக்கு வரும்போது புதுச்சேரியின் பால் உற்பத்தி பெருமளவில் உயர்வதோடு, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b