8 கோடி மக்களுக்கும் தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது – அமைச்சர் வெங்கடரமணன்
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) 80-வது சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்
Venkat


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

80-வது சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கலந்து கொண்டார். முன்னதாக கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், தொடர்ந்து பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன்,

தமிழகத்தில் உள்ள சுமார் 8 கோடி பொதுமக்களுக்கும், இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் தரமான உணவுப் பொருட்கள் சென்றடைவதை அரசு உறுதி செய்து வருவதாக தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை என்பது ரேஷன் கடைகளுடன் மட்டுமே சுருக்கப்பட்டு, போதிய கண்காணிப்பு இல்லாமல் இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

தற்போதைய ஆட்சியில் வேளாண்மைத் துறையிடம் இருந்து நெல் மற்றும் அரிசி கொள்முதல் செய்வது தொடங்கி, அவற்றை ரேஷன் கடைகள் மற்றும் பிற துறைகளுக்கு விநியோகிக்கும் வரையிலான முழு செயல்முறையும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உயர்தரமான உணவுப் பொருட்கள் சரியான எடையில், தங்குதடையின்றி சென்றடைவதை முதன்மை இலக்காகக் கொண்டு உணவுப் பொருள் வழங்கல் துறை செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வரும் நாட்களில் இத்துறை தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ