Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அம்பத்தூர் பாடியில் உள்ள திருவள்ளீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுவிருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய அவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என மக்கள் விரும்பியதாகவும், அவர்களின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் பொதுவிருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் உள்ள தமிழ்நாட்டில், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் முழுமையாக மக்களை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மதம் சார்ந்து பேசுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களின் ஜனநாயகக் கடமை என்றும், ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்றும் கூறினார்.
மேலும், சமத்துவம், சமதர்மம் குறித்து பேசுபவர்கள் மதம் சார்ந்து பேசமாட்டார்கள் என தான் நினைப்பதாகவும், மற்றவர்களின் உரிமைகளில் தலையிட்டு தடை ஏற்படுத்தாத வரை அனைத்தும் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மத நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிப்பதுதான் தவறு; தனிப்பட்ட நம்பிக்கையை வைத்திருப்பதில் தவறில்லை என அமைச்சர் சம்பத்குமார் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ