முருகப்பெருமானை இழிவுபடுத்திய த.வெ.க ஆதரவாளரை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்
சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்க்கடவுள் முருகப்பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவ
நயினார்


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தவெக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் தாங்கள் சார்ந்த மதத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதுடன், பிற மதங்களையும் அன்னைத் தமிழையும் இழிவுபடுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்களைப் பின்பற்றி, தவெக ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் மிகவும் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தி வருவதாகவும், இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதநல்லிணக்கம் குறித்து பேசும் தவெக தலைவர் விஜய், தனது கட்சி ஆதரவாளர் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் அந்த நபர் கைது செய்யப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விஜயின் அதிகார நிழலில் மறைந்துகொண்டு இந்து மதத்தின் மீது நஞ்சைக் கக்கும் நபர்களை அவர் காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோடிக்கணக்கான மக்களின் ஆராதனைக்குரிய முருகப்பெருமானை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தவெக அரசு பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P