Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஊதிய பாக்கி தொடர்பான வழக்கில், தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ரூ.8.39 கோடியை நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.
இப்படத்தை இயக்குவதற்காக சுதா கொங்கராவுக்கு ரூ.15 கோடி ஊதியம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதில் ரூ.8.39 கோடி ஊதியம் நிலுவையில் இருப்பதாகவும் கூறி, அந்தத் தொகையை பெற்றுத்தரக் கோரி சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்தின் OTT மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் மூலம் கிடைத்த வருவாய் உள்ளிட்ட முழுமையான வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரரான டான் பிக்சர்ஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, டான் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.8.39 கோடியை நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை செலுத்தத் தவறினால், அந்நிறுவனம் எதிர்காலத்தில் தயாரிக்கும் திரைப்படங்களின் வருவாயை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ