புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜ.க – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம்
புதுக்கோட்டை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பாஜக சார்பில் திலகர் திடலில் இருந்து தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று காந்தி சிலையை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதே நேரத்தில், திலகர் திடலில் இந்திய கம்யூ
வாக்குவாதம்


புதுக்கோட்டை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பாஜக சார்பில் திலகர் திடலில் இருந்து தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று காந்தி சிலையை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

அதே நேரத்தில், திலகர் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயண பிரச்சார விழிப்புணர்வு இயக்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதனிடையே பாஜகவினர் தங்களது நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்னதாக ஒலிபெருக்கி மூலம் ஜெய்ஹிந்த் பாடலை ஒலிபரப்பினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது நிகழ்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஒலிபெருக்கியை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் இரு தரப்பினரும் கலைந்து செல்ல மறுத்து மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாஜகவினர் வந்தே மாதரம் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக என்றும் முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக ஒழிக, மதவாத சக்தி ஒழிக என முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

இதையடுத்து காவல்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் வைத்திருந்த ஒலிபெருக்கியை நிறுத்தச் செய்ததுடன், இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

காவல்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam