Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜெயங்கொண்டநிலை பகுதியில் புதிய கல்குவாரியை மூட வலியுறுத்தியும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனி கல்குவாரிகள் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஞானவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயங்கொண்டநிலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், தனியார் புதிய கிரஷர் மற்றும் கல்குவாரிகளை மூட வேண்டும் எனவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் பழைய கிரஷர் மற்றும் கல்குவாரிகளையும் மூட வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மயில்ராயன்கோட்டை நாடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 பஞ்சாயத்துகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், மொத்தம் 67 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, புதிய மற்றும் பழைய கல்குவாரிகள் என அனைத்து கல்குவாரிகளையும் மூட வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அமைக்கப்படுவதை தடுக்க, அரசிடம் வலியுறுத்தி உரிய தடை உத்தரவு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டநிலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கல்குவாரிகளுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 15 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 67 கிராம மக்கள் ஒன்றிணைந்து கல்குவாரிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam